கொத்துவா மீனை கழுவிகின்ற இந்த பெண்ணின் புகைப்படம் என்னென்ன சொல்கிறது ? மீன்தொழிலில் பெண்களின் மறைக்கப்பட்ட உழைப்பை காட்டுகிறது. ஆனால், இவ்வளவு கழுவவேண்டிய கட்டாயம் ஏன் ? மீன் மீது, பின்னால் மஞ்சள் தார்பாய் மேல் இருக்கும் வலை, மற்றும் படகை சுத்தம் செய்யும் இரண்டு நபர்களின் சட்டையில் கூட இவ்வளவு சேறு ஏன்? இந்த செறின் கதை தான் என்ன ? ஒரு பகுதியின் கதையை அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக மற்றும் சமூகரீதியாக பலரும் எழுதியுள்ளார். காவிரி கடைமடை பகுதியின் கதையை இந்த சேறை மையமாக வைத்து சொல்வது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

படம் 1: பெண் ‘கொத்துவா’ மீன்களைச் சுத்தம் செய்தல், மீனவர்கள் வலையிலிருந்து மீன்களை எடுத்த பிறகு தங்கள் படகையும் வலையையும் சுத்தம் செய்தல். இப்புகைப்படம் நாகப்பட்டினம் மாவட்டம், வெள்ளப்பள்ளம் கிராமத்தில் ஆசிரியரால் எடுக்கப்பட்டது.
காவிரி கடைமடைப் பகுதியிலுள்ள கிளை-ஆறுகள் கிழக்கில் வங்கக்கடலிலும், தெற்கே பாக் விரிகுடாவிலும் கலக்கின்றன. பாக் விரிகுடா என்பது இந்தியா மற்றும் வடக்கு இலங்கையின் நிலப்பரப்புகளுக்கு இடையில் மேற்கிலிருந்து கிழக்காக மென்மையான சரிவுடன் அமைந்துள்ள ஒரு ஆழமற்ற கடல்[1]. அதேநேரம், பரந்த வங்கக்கடல் அதைவிட ஆழமானது.

படம் 2 காவிரி கடைமடை அமைப்பை உருவாக்கும் அடர்த்தியான கிளை ஆறுகள். படம்: காவிரி ஆற்றுப் படுகை வரைபடத்திலிருந்து எடுக்கப்பட்டது. பதிப்புரிமைகள்: தேசிய நதி பாதுகாப்பு இயக்குநரகம், ஜல் சக்தி அமைச்சகம். இந்திய அரசு, 2024. அணுகப்பட்ட இடம்: https://cganga.org/wp-content/uploads/2025/10/Cauvery_River-Atlas_151025.pdf
புவியியல்ரீதியாக பார்த்தால், பல ஆயிரம் ஆண்டுகளாக படிந்த வண்டல் மண் தான் காவிரி டெல்டாவை உருவாக்கியுள்ளது. இந்த வண்டல் படிவுகள், சேறு மற்றும் கடலின் கலவையில் தான் இப்பகுதியின் கடற்கரை உருவானது. கடற்கரையில், வண்டல் படிவுகளே ஆண்டு முழுவதும் மிகவும் செழிப்பான வளமான மீன்பிடித் தளங்களை உருவாக்குகின்றன – இவை மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் வரலாற்றையும் வடிவமைக்கின்றன.

படம் 3 காவிரி டெல்டா கடற்கரைகளில் உள்ள வண்டல் ஓட்டங்கள். கள நேர்காணல்கள், கூகுள் எர்த் மற்றும் ஜெமினி கருவிகளைப் பயன்படுத்தி, ஆசிரியரால் தயாரிக்கப்பட்ட வரைபடம்.
ஆண்டுதோறும் பெய்யும் தென்மேற்குப் பருவமழையின் போது, காவிரி நதியிலிருந்து, குறிப்பாக அதன் தெற்குக் கிளை ஆறுகளிலிருந்து பாக் விரிகுடாவில் அதிகளவில் சேறு கலக்கிறது. இக்கடலின் சரிவின் காரணமாக, சத்து-நிறைந்த இந்த வண்டல் சேறு படிவுகள், பாக் விரிகுடாவின் வழியே கிழக்கு நோக்கி உருண்டு வங்கக்கடலில் கலக்கிறது. படம் 1-இல் சுத்தம் செய்யப்படும் கொத்துவா மீன் உட்பட, இப்பகுதியின் பெரும்பாலான மீன்களும் இந்த மண்டலத்தில்தான் பிடிக்கப்படுகின்றன. ஜூலை-செப்டம்பர் மாதங்களில், வடக்கு நோக்கிய கரையோர நீரோட்டம் , சேறை வடமேற்கு திசையில் கரையை நோக்கிப் பயணிக்கச் செய்கின்றன. நவம்பர்-டிசம்பர் மாதங்களில்,வடகிழக்குப் பருவமழையின் போது, வடக்கிலிருந்து தெற்காக பாயும் நீரோட்டத்தோடு இந்த கரைகளிலிருந்து பாக் விரிகுடாவை நோக்கி சேறு மீண்டும் அகற்றபடும்.
நவம்பர்-டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையின் போது அடிக்கடி ஏற்படும் புயல் மற்றும் சூறாவளி காற்றால் கடல்நீரும், அலைகளுடன் தரையில் உள்ள சேறும் கரைக்கு தள்ளப்படும். உதாரணமாக, 2018-ல், இப்பகுதியைத் தாக்கிய கஜா புயலுடன் ஏற்பட்ட பேரழிவுகரமான புயல் அலைகள், கடலடியில் இருந்த களிமண் கலந்த சேறை கிட்டத்தட்ட 1.5 கி.மீ. உள்நாட்டிற்குள் தள்ளி, தெற்கே உள்ள சில இடங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இப்படியாக, இப்பகுதியில் வண்டல் சேறின் சுழற்சி அமைந்துள்ளது.
வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில், பெரிய மீன்பிடி படகுகளுக்கு சேற்றிலிருந்து பாதுகாப்பு உறுதிசெய்யும்படி, மாநில மீன்வளத் துறை, தனது அளவற்ற ஞானத்தால், இரண்டு தூண்டில் வளைவுகளுடன், மீன்பிடித் துறைமுகம் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தது. 2021-ல் கட்டுமானம் தொடங்கியதும், தூண்டில்வளைவுகளுக்காக அடுக்கப்பட்ட பாறாங்கற்கள் களிமண் நிறைந்த கடற்தரையில் மூழ்கத் தொடங்கின. அலைத்தடுப்பின் 30% மட்டுமே கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பணிகள் நிறுத்தப்பட்டன. துறைமுகத் திட்டத்தின் இந்த மாபெரும் தோல்வியானது வெறும் ஊழலாய் பற்றி மட்டுமல்ல, சேற்றின் கணிக்க முடியாத தன்மையையும் சுட்டிக்காட்டுகிறது. சேறு படிதலுக்குப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஒரு தீர்வாகக் கருதப்பட்டது, ஆனால் இந்த சேறு, தொழில்நுட்பத்துக்கே ஒரு சவாலாக உள்ளது.
வரலாற்றை தீர்மானிக்கும் சேறு
சோழர்களின் ஆட்சி உட்பட, கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக நாகப்பட்டினம் ஒரு முக்கியமான துறைமுக நகரமாகத் திகழ்ந்தது. போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பின்னர் 1784 முதல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ். இந்தக் காலனித்துவ காலத்தில், முக்கியமான துறைமுகங்களின் செயல்பாட்டிற்கு சேறும் வண்டலும் ஒரு பிரச்சினையாகக் கருதப்பட்டது. காவிரி டெல்டாவில் உள்ள துறைமுகங்கள் “ஆழமான” துறைமுகங்களாகக் கருதப்படவில்லை. நாகப்பட்டினத்தில், கப்பல்கள் துறைமுகத்திலிருந்து 2 முதல் 4 மைல் தொலைவில் நங்கூரம் போட்டு நிற்க வேண்டியிருந்தது. துறைமுக நுழைவாயிலில் வண்டல் படிவதைக் குறைப்பதற்காக, டச்சுக்காரர்கள் ஆற்றின் முகத்துவாரத்தில் அலைதடுப்புகளை அமைத்திருந்தனர் (படம் 4).

படம் 4, 1680-ஆம் ஆண்டைச் சேர்ந்த ‘நெரிசலான நாகப்பட்டினத்தையும்’ . அத்துடன் ஆற்று முகத்துவாரத் தடுப்பணைகளையும் சித்தரிக்கிறது. ‘நேகப்பட்டினம் வான் சோரோமண்டல்’, சுமார் 1680-ல் யோஹன்னஸ் கிப் என்பவரால் செய்யப்பட்ட. விக்கிமீடியா காமன்ஸ் வழியாகப் பொது உரிமையில் உள்ளது.https://commons.wikimedia.org/wiki/File:Negapatnam_van_Choromandel.jpg
1680ல் வரைந்த இந்த ஓவியம்[2] கட்டுவதை போல், கரையிலிருந்து கணிசமான தூரத்தில் நிறுத்திவைத்த பெரிய கப்பல்களிலிருந்து சிறிய படகுகள் பொருட்களை ஏற்றி இறக்கி வந்தன. இது காவிரி டெல்டா கடற்கரையில் வண்டல் படிதல் ஒரு பிரச்சனையாக காண்பதில் ஒரு தோற்றத்தை உருவெடுக்க வழிவகுத்தது.

படம் 5: தற்போது படம் 4-இல் உள்ள அதே இடம், அலைதடுப்புடன் உருவாக்கப்பட்ட முகத்துவாரத்துடன்.
அலை மற்றும் ‘அரிப்பு’
இதற்கிடையில், டென்மார்க், தஞ்சாவூர் அரசரிடமிருந்து நாகப்பட்டினத்தின் வடக்கே உள்ள தரங்கம்பாடி (ட்ராங்கபார்) துறைமுகத்தை பெற்று, ஆண்டு 1620-ல் டான்ஸ்போர்க் கோட்டையைக் கட்டியது. வண்டல் படிவு குறைவாக இருந்தபோதிலும், இங்கு கடல் கொந்தளிப்பாக இருந்தது.தரங்கம்பாடி என்ற பெயரே அலைகளின் சக்தியைக் குறிக்கிறது.1752 மற்றும் 1755 ஆம் ஆண்டுகளில், வடகிழக்குப் பருவமழையின் போது ஏற்பட்ட புயல் அலைகளினால் கோட்டைக்கு அருகில் உள்ள நிலங்கள் மூழ்கியது (ஸ்டீபன் 2023). [3]
இங்கு சேறு மற்றும் வண்டல்மண்ணின் தாக்கம் நாகபட்டினத்தை விட குறைவாக இருப்பதால், பிரிட்டிஷார்கள் இதை கைப்பற்ற அருவமாக இருந்தன. ஆண்டு 1845ல் பிரிட்டிஷார் நேரடியாக தரங்கம்பாடியை கைப்பற்றினர். ஆவி இயந்திரம் கொண்ட கப்பல்களை அறிமுகப்படுத்தவும், பாய்மரக் கலன்களை முற்றிலுமாக அகற்றிடவும் என 1837-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி மேற்கொண்ட தீர்மானமும் இதற்கு ஒரு காரணியாக அமைந்திருக்கக்கூடும் (கலிலி 2020). அதாவது, பெரிய மற்றும் கனமான கப்பல்களுக்கு சேறு-இல்லாத துறைமுகங்கள் தேவைப்பட்டன. இதனால், வண்டல் மண் ஒரு “பிரச்சனையாக” உருவெடுத்தது; ஆக வண்டல் என்கிற பிரச்சனைக்கு பொறியியல் முடிவுகள் மட்டுமல்ல, அரசியல் முடிவுகளும் இடிக்கப்பட்டன.
பிரிட்டிஷார் தரங்கம்பாடியை கைப்பற்ற பின்பு, அதற்க்கு கூடிய கவனம் செலுத்தினர். நாகப்பட்டினத்திலிருந்து மாற்றி, தரங்கம்பாடியை மாவட்டத் தலைநகரமாகவும் மற்றும் கலெக்டரின் இல்லமாகவும் ஆக்கினர். 1846-ல், அவர்கள் தரங்கம்பாடியிலிருந்து திருமூலவாசல் மற்றும் அதற்க்கு வடக்குள்ள துறைமுகங்களுக்கு நீர்வழிப் போக்குவரத்துக் கால்வாய்களை அமைத்தனர். ஆனால் அவர்களும் மீண்டும் மீண்டும் கடலின் சீற்றத்தை எதிர்கொண்டனர். ஆண்டு 1849-ல், வடகிழக்குப் பருவமழையின் போது ஏற்பட்ட மற்றொரு புயல், 2 கஜத்திற்கும் மேலான கடலோர நிலத்தைக் அரிக்கக் காரணமாக அமைந்தது. ஆண்டு 1853-ல், ஒரு புயலால் சுங்க அலுவலகம் சேதமடைந்தது. 1856-ஆம் ஆண்டின் மெட்ராஸ் பொறியாளர்கள் அறிக்கை, டான்ஸ்போர்க் கோட்டையைப் பாதுகாக்க டேனியர்களால் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த பல அலைதடுப்பகளையும் கடல் சுவர்களையும் குறிப்பிடுகிறது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கடற்கரை தற்போதைய கடல் சுவருக்கு அப்பால் 500 அடி தொலைவில் இருந்ததாக 1853-ஆம் ஆண்டின் ஒரு பிரிட்டிஷ் அறிக்கை குறிப்பிடுகிறது. 1859-இல் ஆங்கிலேயர்கள் தரங்கம்பாடியில் உள்ள அலைதடுப்புகளிலும் பல சரிசெய்யும் மற்றும் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது அரிப்பு என்று அழைக்கப்படாத, கடற்கரையின் இந்தத் தொடர்ச்சியான அரிப்பானது தரங்கம்பாடியில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருப்பதாக காலனித்துவ நிர்வாகிகள் உணர்ந்தனர்.
கடலின் சீற்றத்தினால் கடலோர நிலங்கள் பாதிக்கப்படுவதை தரங்கம்பாடியில் அவர்கள் நன்குணர்ந்தோர். அனால், கடலரிப்பு என்கிற சொற்பழிவு அப்போது இன்னும் உருவெடுக்கவில்லை. எந்த அளவுக்கென்றால், 1907ம் ஆண்டின் தஞ்சாவூர் மாவட்ட அரசிதழ், கடற்கரையில் டெல்டாவின் உருவாக்கம் முற்றிலும் நின்றுவிட்டது என்று திட்டவட்டமாகக் கூறுகிறது; அதாவது, கடலோர வண்டல் மற்றும் மணல் ஆகியவை வலுவான சோழமண்டல நீரோட்டத்தால் அரிக்கப்பட்டு வருகின்றன, மேலும் அவற்றை ஈடுசெய்ய புதிய வண்டல் மற்றும் மணல் எதுவும் வந்து சேர்வதில்லை என்று. இதுவரை, சேறு மற்றும் வண்டல் பிடித்தலை பிரச்சனையாக பார்க்கின்ற தோற்றத்திற்கு மாறாக “வண்டல் பற்றாக்குறை” என்று கடலரிப்பை குறித்து மற்றொரு பார்வை முன்வைக்கப்பட்டது.
இத்தனை கடலோர பாதுகாப்பு கட்டுமானங்களுக்கு ஏற்பட்ட தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் தரங்கம்பாடியை விட்டு வெளியேற முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது. ஏனென்றால், ஆண்டு 1860-ல், நாகப்பட்டினம் இரயில் பாதை அமைக்கப் பணி தொடங்கியது. மெட்ராஸ் மாகாணத்தில் இரயில்வே தொடங்கி வெறும் 5 ஆண்டுகளே ஆன நிலையில், 1861-க்குள் நாகப்பட்டினத்தில் இரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது. மெட்ராஸ் மாகாணத்திற்கு இப்பகுதியின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுது. காலனிய அரசின் கவனம் மீண்டும் நாகப்பட்டினம் திரும்பியது.
கட்டமைத்த கடற்கரை
நாகப்பட்டினத்தில் மீண்டும் அதே வண்டல்மண்ணுக்கும் கடலுக்குமான போட்டியை காண்கிறோம். கடல் மற்றும் ஆற்று முகத்துவாரங்களில் புதிய நீராவி மற்றும் மனித உழைப்பால் இயங்கும் இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரும் பணி துறைமுகத்தின் ஒரு முக்கியப் பணியாக உருவெடுத்தது. தூர்வாரும் பணிகளுக்காக ஒரு புதிய துறைமுக அதிகாரி நியமிக்கப்பட்டார் (சீராலன் 1987). மேலும், துறைமுகத்திற்குச் செல்லும் ஆற்றுப் படுகைகளை நிரந்தரமாக ஆழப்படுத்துவதற்காகப் பல்வேறு தொழில்நுட்பக் குழுக்களும் நியமிக்கப்பட்டன. 1870-ல், பாக் விரிகுடாக் கடற்கரைகளுக்கு அருகிலுள்ள உப்பளங்களை இணைக்கும் வேதாரண்யம் கால்வாய் கட்டப்பட்டது. இது இரட்டை நோக்கங்களுக்கு உதவுகின்ற வகையில் அமைந்தது – நாகப்பட்டினத்தில் உப்பு ஏற்றுமதிக்கான மலிவான போக்குவரத்து,அத்துடன், துறைமுகத்திற்கு சற்று மேலே ஆற்றுப் பாதைகளும் ஆழம் படுத்தப்பட்டன. 1870-களில், தூர்வாரப்பட்ட மணலில் ஒரு நிரந்தரத் துறைமுக தளம் கட்டப்பட்டது. ஆனால், அன்றாட தூர்வாரும் பணி செலவு மிக்கது என்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டது.[4]
அதேநேரம், 1862ம் ஆண்டின் புயலில், ஆற்று-முகத்துவாரத்தில் விரிவாக்கப்பட்டிருந்த அலைதடுப்புகள் சேதமடைந்தன, அவற்றை 1865ம் ஆண்டில்தான் சரிசெய்ய முடிந்தது. 1909ம் ஆண்டில், துறைமுகத்திலிருந்து சிறு-தூரத்தில் கடலில் அமைக்கப்பட்ட சோதனைத் அலைதடுப்புகள், வடகிழக்குப் பருவகாலத்தின் வலுவான நீரோட்டத்தால் அடித்துச் உடைந்துவிட்டன – இதைத் துறைமுக அதிகாரி “வடகிழக்கு பருவமழையின் சீற்றத்தை இந்த கடலில் அமைத்த அலைத்தடுப்புகள் தாங்கிக்கொள்ள முடியாது என்பதும், இதற்காகச் செய்யப்படும் எந்த ஒரு செலவும் வீண் என்பதும் காணப்படுகிறது.”[5]
அதேநேரம், இதைவிட ஆழமான துறைமுகம் தூத்துக்குடியில் 1876-ல் திறக்கப்பட்டு, சென்னையுடன் இரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக சிலோன் (இலங்கை) வர்த்தகத்தின் மைய்ய இடத்திலுருந்து நாகப்பட்டினம் விலகியது. இதனால், 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவம் குறைந்தது.
இவ்வாறு, வண்டல் மற்றும் சேறு படிதலை ஒரு சிக்கலாகக் கருதுவது காலனித்துவ உரையாடலின் ஒரு மையக் கருத்து ஆகிறது – அதாவது இது ஒரு பூவில் அல்லது இயற்கையான பிரச்சனை அல்ல, அரசியல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கலுக்கேற்ப மாறிகிறது. காவிரி கடைமடை கடற்கரைகளின் வரலாற்றை, சேறு ஆற்றிய முக்கியப் பங்கைக் குறிப்பிடாமல் எழுத முடியாது!
சுதந்திரத்திற்குப் பிறகு தொடர்ச்சி
பாக் விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது கொடியக்கரை. தற்போது எந்தத் துறைமுகத்தின் தடயமும் கண்ணுக்குத் தெரியாது, அனால் பழைய ஆவணங்களை புரட்டி பார்த்தல் தான் ஒரு அதிரவைக்கும் செயதி கண்டறிந்தேன் – அங்கு 1977-ஆம் ஆண்டில் ஒரு “டி-ஜெட்டி” மாதிரி மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டது என்று.

படம் 6: அந்த இடத்திலோ, அல்லது 2024-ஆம் ஆண்டின் இந்த கூகிள் செயற்கைகோள் படத்திலோ, டி-ஜெட்டி போன்ற எந்த அமைப்பும் தென்படவில்லை.
காவிரி டெல்டாவின் தெற்குப் பகுதி கிளை ஆறுகளிலிருந்து அடித்து வரப்பட்ட பெருமளவிலான வண்டல் மற்றும் சேறு மண்ணால் கட்டப்பட்ட மீன்பிடித் துறைமுகம் மூழ்கடிக்கப்பட்டதை 2002ம் ஆண்டின் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. மீனவர்கள் விவரித்த செறின் சுழற்சி முறையை இது உறுதிப்படுத்துகிறது.

படம் 7: 2002-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கூகிள் செயற்கைகோள் புகைப்படம், இதில் மணல் மற்றும் சேறாள் ஏற்கனவே உள்ளிழுக்கப்பட்ட ஒரு டி-ஜெட்டியின் தெளிவற்ற வடிவம் தெரிகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், இப்பகுதி முழுவதும் பல துறைமுகங்கள் மற்றும் அலைத்தடுப்புகளுக்கான கோரிக்கைகள் வந்துள்ளன. தரங்கம்பாடி, நம்பியார் நகர் (நாகப்பட்டினம் நகரில்), வெள்ளப்பள்ளம் மற்றும் ஆற்காட்டுத்துறை (கொடியகரைக்கு அருகில்) ஆகிய இடங்களில் புதியவை கட்டப்பட்டு வருகின்றன. தரங்கம்பாடியில், அரிப்பு மற்றும் கடல் சுவர்கள் காரணமாகவும், கரையேறும் படகுகளுக்கு இடமில்லாததாலும் இந்தக் கோரிக்கை எழுந்தது. வெள்ளப்பள்ளத்தில், ஆண்டுதோறும் கரைக்கு வரும் சேற்றைத் தடுப்பதற்கு இந்தக் கோரிக்கை எழுந்தது. ஆனால், ஆற்காட்டுத்துறையில் கட்டப்பட்ட அலைத்தடுப்பு, துறைமுகப் பகுதிக்குள் சேறு படிவதைத் தடுக்கவில்லை. மேலும், அலைத்தடுப்புக்குத் தெற்கே சேறு கடுமையாகக் குவிந்துள்ளது. அதே நேரம் , வெள்ளப்பள்ளத்தில் உள்ள அலைத்தடுப்புப் பாறாங்கற்கள் மூழ்கி வருகின்றன.
காவிரி டெல்டா கடற்கரையில் நிகழ்ந்த “சேறு படிவு” மற்றும் கடலோரப் கட்டுமானங்கள் ஆகியவற்றின் இந்தச் சுருக்கமான வரலாறு, தத்துவார்த்த ஆய்வுக்குத் தகுதியானது. ஆங்கிலத்தில் “shore” என்ற சொல்லுக்கு தமிழில் ‘கரை’ என்று பயன்படுத்துகின்றோம் . ஆனால், ‘கரை’ என்பது கரைப்பது, கரைந்து போவது போன்ற பொருளாகும். நான் ஊகிப்பது என்னவென்றால், கரை என்பது நிலமும் நீரும் தொடர்ச்சியாகக் கரையும் இடமாகக் கருதப்படுகிறது – அது எப்போதும் உருவாகிக்கொண்டிருக்கும். இருப்பினும், கடலோரப் பொறியியல் மற்றும் கட்டுமானங்கள், கரையை ஒரு திடமான நிலமாக உருவாக்கும் எதிர் தர்க்கத்தின் அடிப்படையில் இயங்குகிறது – அதாவது, நிலத்தையும் நீரையும் பிரித்து, சேறும் மணலின் சுழற்சியை அடக்குவதே அதன் நோக்கம். இது பல பொருளாதார மற்றும் அரசியல் நோக்கத்தில் அமைந்ததென்பதில் சந்தேகமில்லை. சேறின் சுழற்சியான இயங்கியலுக்கும் கடலோர பொறியியல் அறிவியலிலுள்ள திடமான கற்பனைக்கும் இந்த அடிப்படை வேறுபாடு உள்ளது. . இவ்வாறு, சேறு என்பது கடற்கரையை தொடர்ச்சியாக உருவாக்குவதில் ஒரு மையப் பங்கு வகிக்கிறது; அது வெறும் பூவியியல் ரீதியாக மட்டுமல்லாமல், அதை பற்றிய உரையாடல், அரசியல் மற்றும் வாழ்வாதாரங்களை வடிவமைப்பதன் மூலமும் கடற்கரைகளை உருவாக்குகிறது.
நன்றியுரை
இந்தப் பதிவு பங்களிப்பு ஆசிரியர் மிஸ்ரியா ஷைக் அலி அவர்களால் தொகுக்கப்பட்டு, பங்களிப்பு ஆசிரியர் தியென்-டுங் ஹா அவர்களால் சரிபார்க்கப்பட்டது.
குறிப்புகள்
[1] இந்தியாவின் தென்கிழக்குப் பகுதிகள் குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் மேற்கிலிருந்து கிழக்காக ஒரு மென்மையான சரிவைக் கொண்டுள்ளது. இதனால்தான் பெரும்பாலான ஆறுகள் கிழக்குக் கடற்கரையில் கலக்கின்றன. இந்தியாவின் மற்ற பகுதிகளை விட காவிரி கடைமடை தாழ்வான உயரத்தைக் கொண்டிருப்பதற்கும் இதுவே காரணம். இந்தச் சரிவு கடற்கரைகளுக்குப் பிறகும், கடலோரப் படுகையிலும் தொடர்கிறது. தமிழில் மேல்-கீழ் என்ற சொற்களிலுருந்து மேற்கு-கிழக்கு திசைகளுக்கும் பெயர் வந்துருப்பது கூட சில வல்லுனர்களின் வியூகமாகும்.
[2] இந்த ஓவியம், இந்த சிறு சரக்குப் படகு சேவைகளுக்கு அருகில், அதே அளவிலான படகுகளில் நடைபெறும் மீன்பிடி சித்தரிக்கிறது – இதன் மூலம், இன்றைய மீன்பிடி சமூகங்கள் எனப் அழைக்கப்படுபவர்கள், ஒரு காலத்தில் பல்வேறு கடல் சார்ந்த தொழில்களில் தீவிரமாகப் பங்கேற்றிருக்கலாம் என்பதை இது உணர்த்தக்கூடும்.
[3] இழப்பை ஈடுசெய்வதற்காக, டேனியர்கள் தஞ்சாவூர் சராசரிடம் தங்கள் நிலப்பரப்பை விரிவுபடுத்தக் கோரினர். அரசனின் மறுப்பு, தஞ்சாவூருக்கும் தரங்கம்பாடிக்கும் இடையே ஒரு மோதலுக்கு வழிவகுத்தது, மேலும் பிரிட்டிஷ் மெட்ராஸ் ஆளுநர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டியிருந்தது.
[4] தஞ்சாவூர் மாவட்டக் கையேடு, 1883, வெங்கடசாமி எழுதியது. தமிழ்நாடு மாநில ஆவணக்காப்பகத்தில் பெறப்பட்டது.
[5] 1910-ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் துறைமுக அதிகாரியின் அறிக்கை – எண்.358, தேதி 28தநவம்பர் 1910. தமிழ்நாடு மாநில ஆவணக்காப்பகத்தில் இருந்து பெறப்பட்டது.
நூல் பட்டியல்
கலிலி, லாலே. 2020.போர் மற்றும் வர்த்தகத்தின் நரம்புகள்: அரேபிய தீபகற்பத்தில் கப்பல் போக்குவரத்தும் முதலாளித்துவமும்நோக்கி.
சீராலன், என். 1987. ‘சென்னை மாகாணத்தின் துறைமுகங்கள் மற்றும் துறைமுகப் பகுதிகள் குறித்த ஒரு ஆய்வு (1858 – 1900)’. பாரதியார் பல்கலைக்கழகம். தமிழ்நாடு மாநில ஆவணக்காப்பகம்.
ஸ்டீபன், எஸ். ஜெயசீலா. 2023.கோரமண்டல் கடற்கரையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் வரலாறு: ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரைமுதல் பதிப்பு. ரவுட்லெட்ஜ். https://doi.org/10.4324/9781003405078.